சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்பட்டது.
பி.ப. 5.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்தது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகச் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொதுஅவசர காலநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கமளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், ‘டித்வா’ சூறாவளி காரணமாக நாட்டில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பாதிப்புகளை விரைவாக வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர காலநிலையை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன.
இதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
அதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
