ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைக் குழுவினர் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

By RifkaNF