அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் பீட்டர் மெண்டல்சன் (Lord Peter Mandelson) லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அலுவலகமொன்றில் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் லோர்ட் மெண்டல்சன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 72 வயதான லோர்ட் மெண்டல்சன், வடக்கு லண்டனின் கெம்டன் (Camden) பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது நேற்று (23) பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், பாலியல் குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. பீட்டர் மெண்டல்சன் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவராகக் கடமையாற்றியதுடன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
