அடுத்த வருடம் தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பரிவுணர்வுள்ள ஒரு பிள்ளையை உருவாக்கக்கூடிய கல்வி முறையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதற்கிடையில், பெண்களினால் கடனைப் பெறுவதற்குச் சொத்துக்கள் இல்லாவிட்டால், அதற்கான உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்கக்கூடிய வகையிலான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் எனவும், கடனைச் செலுத்தப் பெண்களுக்கு முடியாமல் போனால் அதனை அரசாங்கம் செலுத்தும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். நுண்நிதி கடன்களின் வட்டி காரணமாகக் கிராமங்களில் அதிகளவான பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கிராமப்புறப் பெண்கள் இந்தக் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிலிருந்து பெண்களை மீட்பதற்காகச் சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும், மறுபுறம் திட்டத்தை வெற்றிகரமாகக் கண்காணித்துச் செயற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் சலுகை வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். “விசேடமாக மகளிர் அமைச்சின் ஊடாக ஒரு உதவித் திட்டம் உள்ளது. அவளால் கடனை எவ்வகையிலும் தாங்கிக்கொள்ள முடியாவிட்டால், அவளுக்குப் பொருளாதார ரீதியில் இயலுமை இல்லை என்று கூறி அவளைப் பொருளாதாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமா? அப்படி முடியாது. பொருளாதார இயலுமை இல்லாத ஒருவரை நாம் எவ்வாறு பொருளாதாரத்தில் பங்குதாரராக்குவது என்பதற்காக ஒரு நிதி உதவித் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம். இந்த வருடமும் அடுத்த வருடமும் அதனை மேலும் பலப்படுத்தி விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.” சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பிற்கான தற்போதைய சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். “நீண்ட காலமாக வேதனையையும் துயரத்தையும் இதயத்தில் தாங்கி, அதனைத் தலையில் சுமையாகக் கொண்ட எமது நாட்டுப் பெண்களை அந்தச் சுமையிலிருந்து விடுவித்து, புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் செயற்படுகின்றோம் என நாம் நம்புகிறோம்.” சில குறிப்பிட்ட கலாசாரங்கள் காரணமாகப் பெண்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான பெண்களை விடுவிப்பதற்குத் தேவையான புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது கலாசார மோதல்களை ஏற்படுத்தாத வகையில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

By RifkaNF