கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார். போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார். அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், ‘சமூக சக்தி’ வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

By RifkaNF