தேசியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கும், அதனைப் பேணுவதற்கும், வலுசக்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது குறித்த விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, ஒரு முன்னுரிமைத் துறையாக வலுசக்தி பொருளாதாரம் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், பிரதான பொருளாதாரத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் நிலவும் பலவீனங்கள் காரணமாக அத்துறை சார்ந்த முதலீடுகளில் பின்னடைவு காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்பொன்றின் அவசியத்தை ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அதன்படி, தேசியக் கொள்கைகள், உத்திகள் மற்றும் பெறுபேறுகளை வழங்கும் கட்டமைப்புகள் ஒன்றோடொன்று இணங்கும் வகையில் வலுசக்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிபுணர் குழுவில் கலாநிதி ஹான்ஸ் விஜேசுரிய – (தலைவர்), துமிந்த ஹுலங்கமுவ, பொறியியலாளர் உபுல் அபேசிறிவர்தன, டி.ஜே. ராஜகருணா, பேராசிரியர் விஜேந்திர பண்டார, பொறியியலாளர் புபுது நிரோஷன ஹேடிகல்ல, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர், வலுசக்தி அமைச்சின் செயலாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

By RifkaNF