இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற, இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிராந்தியத்தில் உள்ள ஏனைய மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை இவ்விடயத்தில் சில முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், சுகாதார சேவைகளைப் பெறுவதில் இயலாமையுடைய நபர்கள் இன்னமும் பல பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். சமூகத் தடைகளைக் கண்டறிவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனப்பான்மை மாற்றத்தை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதாரத் தகவல்களைப் பல வடிவங்களில் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இயலாமையுடைய நபர்கள் மீது பாரம்பரியாகக் காணப்படும் மருத்துவக் கண்ணோட்டத்தைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு சேவையை வழங்குவதற்காக, சுகாதாரப் பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனைத்து விடயங்களிலும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஆற்றிவரும் பங்களிப்புப் பாராட்டத்தக்கது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையுடன், சுகாதார அமைச்சின் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் வசிக்கும் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெறுவதில் உடல் ரீதியான மற்றும் மனப்பான்மை ரீதியான தடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை என்று அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்கால சுகாதார வல்லுநர்கள் தங்கள் பயிற்சிக் காலத்திலிருந்தே இந்த உரிமை குறித்து விழிப்புணர்வு பெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவ மற்றும் தாதியர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டமும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

By RifkaNF