போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகளை ஈரான் முதலில் நிராகரித்திருந்தது. ஈரானின் சிரேஷ்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று (25) அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ஈரானின் சொந்த நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படியே போர் முடிவுக்கு வரும் எனவும். போர் முடிவுக்கு வரும் நேரத்தைத் தீர்மானிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் இடமளிக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் 5 முக்கிய நிபந்தனைகளை விதித்திருந்தது:
1 எதிரியின் ‘ஆக்கிரமிப்புகள் மற்றும் கொலைகளை’ முற்றாக நிறுத்துதல்.
2 ஈரானுக்கு எதிராக மீண்டும் போருக்கு வரமாட்டோம் என்பதற்கான உறுதிமொழி.
3 போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பாகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட உத்தரவாதம்.
4 பிராந்தியம் முழுவதும் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துப் எதிர்த்தரப்புக் குழுக்களும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் போரை நிறுத்துதல்.
5 ஈரானின் இயற்கையான மற்றும் சட்டபூர்வமான உரிமையான ஹோர்முஸ் நீரிணையை, தொடர்ந்தும் ஈரானின் இறையாண்மையின் கீழேயே இயங்கச் செய்தல்.
எனினும் அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் இன்னும் பரிசீலித்து வருவதாகவும், ஆரம்பகட்ட பதில் எதிர்மறையாக இருந்தபோதிலும் அதனை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் ஈரானிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (25) ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.பகிரங்கமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஈரானிய அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர்.இருப்பினும், வொஷிங்டன் சார்பில் பாகிஸ்தான் கையளித்த 15 அம்ச முன்மொழிவுக்கான உத்தியோகபூர்வ பதிலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், தெஹ்ரானில் உள்ள சில முக்கிய நபர்கள் இதனைப் பரிசீலித்து வருவதைக் காட்டுவதாகத் தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பாகத் தொடர்புகொண்டுள்ளதாகவும், இன்னும் உத்தியோகபூர்வ பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அதேவேளை ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஒருவேளை முன்னெடுக்கப்பட்டால் அவை பாகிஸ்தான் அல்லது துருக்கியில் நடைபெறலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
