கண்டி, குண்டசாலை மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விளக்கமளித்துள்ளது.இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல, திகன, அலுத்வத்தை, வராபிட்டிய, கம்உதாவ, குண்டசாலை, தம்பராவ, விஜேசிரிகம மற்றும் BOI, IDB ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 16,977 நீர் இணைப்புகளுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டு வருகின்றது.மின் உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் சபை பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது: பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் உறிஞ்சும் கட்டமைப்பு, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதவைப் பாலங்களில் பொருத்தப்பட்ட பம்புகள் மூலம் இயக்கப்படுகிறது.கடந்த காலங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்திருந்த நிலையில், ‘டித்வா’ புயலுக்குப் பின்னர் இப்பகுதிகளில் அதிகளவு சேறு படிந்ததாலும், மேலதிக சேறு வழிந்தோடி வந்ததாலும் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக சபையினால் தற்காலிக அணை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு தற்போது நீர் சுத்திகரிப்பு முறைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பகுதிகளுக்கான நீர் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்படும் இடங்களுக்கு நீர் பவுசர்கள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருகின்றது.எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, மேலதிக உதவியாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஹாரகம பகுதியில் அமைந்துள்ள நீர் தடாகத்தைப் பயன்படுத்தி சுமார் 2 கிலோமீற்றர் நீளமான குழாய் மார்க்கம் ஊடாக சுத்திகரிக்கப்படாத நீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இப்பணிகள் இன்னும் 2-3 நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போது பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் உறிஞ்சும் பம்புகளில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, நீர் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
