இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், கணினி ஊடுருவல்காரர் (Hacker) ஒருவரால் திருடப்பட்டதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 செப்டம்பர் இறுதிக்குள் ஒரு நாட்டிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் டொலர் கடனில், தவணைக் கொடுப்பனவாக 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையான காலப்பகுதியில் திறைசேரியினால் அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதியே இவ்வாறு ஹெக்கர் ஒருவரின் கைக்குச் சென்றுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, இரு பணிப்பாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர் உட்பட நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்துப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன இது தொடர்பாக சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றக் குழுவொன்றின் மூலம் விசாரணை நடத்துவதா இல்லையா என்பது குறித்து சபாநாயகரே தீர்மானிப்பார் என்றும் குறிப்பிட்டார். நிதி அமைச்சு மற்றும் திறைசேரி போன்ற முக்கிய நிறுவனங்களில் இவ்வாறான பாரிய நிதி மோசடி எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து நிதி அமைச்சு விரைவில் உத்தியோகபூர்வ விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RifkaNF