ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (08) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 5-ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற தனது நெருங்கிய உறவினர்கள் எனக் கூறி, தலா 15,000 ரூபா பணத்திற்கு இருவரைப் போலியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியமை விசாரணையில் உறுதியானது.நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்த இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (07) பிடியாணை பிறப்பித்திருந்தார்.பொலிஸார் அவரைக் கைது செய்யத் தேடி வந்த நிலையில், இன்று காலை கொள்ளுப்பிட்டிய, பேதிரிஸ் மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ள கொள்ளுப்பிட்டி யார் பொலிஸார், இதனை “சந்தேகத்திற்கிடமான மரணம்” எனக் குறிப்பிட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மரணம் இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்னர் கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தில் தான் பெற்ற இலஞ்சப் பணத்தில் 60 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், 20 மில்லியன் ரூபாயை முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும் வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்த இவ்விருவரையும் எதிர்வரும் 12-ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த முக்கிய கட்டத்தில் கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவ இடத்திற்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலதிக உடற்கூற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

By RifkaNF