செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 

கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும், 100 இற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். இந்தப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம், தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு வளைவுக்கு அருகில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில், குண்டுவீச்சின் போது தனது இரு பிள்ளைகளை இழந்த தாயார் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

By RifkaNF