பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு மீள பெற்றுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அவற்றை பயன்படுத்த முடியாமல் இளைஞர்கள் தவித்து வந்தனர்

இதையடுத்து சமூக வலைதளங்கள் மீதான தடையை விலக்க கோரியும், நாட்டில் பரவியுள்ள ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்மாண்டுவில் பேரணி நடத்தினர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் எதிர்பார்க்காத அளவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு மீள பெற்றுள்ளது.
இதனை அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.