தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா உறைகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோட்டாக்கள் T-56 ரக துப்பாக்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சுமார் 15,000 வெற்றுத் தோட்டா உறைகளும், பல T-56 தோட்டாக்களும் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முந்துனேகமப் பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் வெடிமருந்துத் தொகுதியொன்று இருப்பதாக பிரதேசவாசியொருவர் தம்புத்தேகமப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, தம்புத்தேகமப் பொலிஸார் இந்தத் தோட்டாக்கள் மற்றும் வெற்றுத் தோட்டா உறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வெற்றுத் தோட்டா உறைகளும் தோட்டாக்கள் பலவும் சிதைவடைந்துள்ளதால், அவை பல வருடங்களுக்கு முன்னர் அப் பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலத்தில் போடப்பட்டிருக்கலாம் என்றும், இராணுவ அல்லது பொலிஸ் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களைக் கொண்டு வந்து இங்கே போட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் தோட்டாக்கள் எவ்வாறு சதுப்பு நிலத்திற்கு வந்தன என்பது குறித்து தம்புத்தேகமப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
