அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. 

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

1981 முதல் 2023 வரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிக்கப்பட்ட ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகள் தொடர்பான அறிக்கையை நீதி அமைச்சால் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பரிசோதனை முடிந்த போதிலும் தக்கவைக்கப்பட்டுள்ள இந்த மாதிரிகள் காரணமாக, போதுமான இடம் இல்லாததால் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் சேமிப்பு வசதிகளை வழங்க முடியவில்லை என்று அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. 

இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி பரிசோதனைகள் முடிக்கப்பட்ட அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சு, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதவான்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

By RifkaNF