கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிக மழையால் நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை கவனம் செலுத்தி வருவதாக அச்சபை தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சபை, 2025/26 பெரும்போகம் தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெற் பயிர்ச்செய்கைக்கான நிலத்தை பண்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆரம்ப நிலையிலேயே காணப்படுவதால் நெற்செய்கை நிலங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இதுவரை எந்த சேதங்களும் பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளது. 

இலவச காப்பீட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய பயிர்களான சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாவட்டப் பொறுப்பதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ள போதிலும், இதுவரை அந்தப் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் பற்றியும் உறுதியான தகவல்கள் பதிவாகவில்லை. 

அதன்படி, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் அதிகாரிகள் தொடர்ந்து விவசாயிகளுடன் தொடர்புகொண்டு, பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்களைப் பெற்று, நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. 

விசேடமாக, நெற் பயிர்ச் செய்கைக்கு சேதம் ஏற்பட்டால், அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேருக்கு ரூபா 100,000/- வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையில் நஷ்டஈடு வழங்கப்படுகிறது. 

அத்துடன் சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா ஆகிய பயிர்ச் செய்கைகளுக்காக 2.5 ஏக்கர் வரையில் அரசாங்கத்தினால் இலவசமாக பயிர்ச் சேத நஷ்டஈடு வழங்கப்படுகிறது. 

இது தவிர, ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்படும் சேதங்களுக்காக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் காப்பீட்டுத் திட்டங்களைப் பெற்றுள்ள விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

By RifkaNF