அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று (09) பதுளை, ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் போது, ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் தொடர்புடைய அனைத்து பேருந்து உரிமையாளர்களும் வங்கிப் பிரதிநிதிகளும் தெளிவுபடுத்தப்பட்டனர். 

வங்கி அட்டைகள் மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான வசதிகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இன்னும் சில மாதங்களுக்குள் ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளிலும் இந்த டிஜிட்டல் கொடுப்பனவு வசதியை ஏற்படுத்துவதற்கு பேருந்து உரிமையாளர்கள் உடன்பட்டுள்ளனர். 

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

By RifkaNF