மேலும் 200 மருந்துகளுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பு
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நேரத்தில் 350 வகையான மருந்துகளின் விலையை பாரியளவில் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக நாட்டின் சந்தையில் பல மருந்துப் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம் (SPMC) சந்தையில் புதிதாக பல மருந்து வகைகளை அறிமுகம் செய்த நிகழ்வின் ஆரம்ப மருந்துத் தொகுதிகளை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 2015ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் (National Drug Regulatory Authority Act) கீழ் மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அந்த அதிகாரசபைக்கு உள்ளது என்றார். இந்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் 2016ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், 2023ஆம் ஆண்டில் மருந்து இறக்குமதி நிறுவனங்களின் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விலைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றார்.
