நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane), பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று (09) மாலை 6.00 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. 

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பாரந்தூக்கிகள் (Cranes) மூலம் இந்த விமானம் கரைக்கு இழுத்து வரப்பட்டது. 

விபத்தின் போதும், மீட்புப் பணியின் போதும் இந்த விமானம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAA) அதிகாரிகள் முன்னெடுத்த ஆரம்பகட்டப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், கிரகரி வாவியின் படகு ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

நுவரெலியாவில் நிலவும் கடும் பனிமூட்டம், மோசமான வானிலை மற்றும் கிரகரி வாவியின் அடிப்பகுதியில் படிந்துள்ள அதிகப்படியான சேறு போன்றவற்றால் கடந்த வியாழக்கிழமை (08) மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருந்தது. 

கடந்த புதன்கிழமை (07) பிற்பகல் 12.30 மணியளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வந்த இந்த நீர் விமானம், கிரகரி வாவியில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. 

விமானிகளின் கட்டுப்பாட்டை மீறி விமானம் வேகமாகத் தரையிறங்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

விபத்து இடம்பெற்ற உடனே அங்கிருந்த படகு ஓட்டுநர்கள் விரைந்து செயற்பட்டு, விமானத்திலிருந்த இரண்டு விமானிகளையும் மீட்டனர். 

காயமடைந்த அவர்கள் இருவரும் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

By RifkaNF