மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட நால்வர் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் 6 கைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று அதிகாலை 5.00 மணியளவில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பெரிய புல்லுமலை பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே புதையல் தோண்டிக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர் வாழைச்சேனை முகாமில் கடமையாற்றுபவர் எனவும், தற்போது விசேட கடமை நிமித்தம் மகாஓயா முகாமில் இணைக்கப்பட்டுள்ள 36 வயதுடைய மொனராகலைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. ஏனைய மூவரும் முறையே உறுகாமம், தெஹியத்தக்கண்டி மற்றும் பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48 மற்றும் 48 வயதுடையவர்களாவர்.கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By RifkaNF