மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
களுத்துறை குற்றவியல் பிரிவிற்கு நேற்று (07) மாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்டபோது, வீட்டின் உள்ளேயும், வீட்டின் முன்புறமும் குவிக்கப்பட்டிருந்த இரசாயனப் பொருட்களை கண்டறிந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட தொகை இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும், இந்த முகவரியைக் கொண்ட வீடு மூடப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மாடிகள் கொண்ட இந்த வீட்டை ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மாதந்தோறும் 150,000 ரூபாய் வாடகை அடிப்படையில் வழங்கியதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி அந்த வீட்டின் சாவியை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நபர் மீண்டும் வழங்கியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பேலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் தற்போது சம்பவம் குறித்து ஸ்தல விசாரணையை மேற்கொண்டு வருவதுடன், களுத்துறை குற்றவியல் பிரிவால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.