வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார்.

குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றது.

இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்துள்ளதையடுத்து குறித்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.

அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் க.கிருஸ்ணதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார். 

By RifkaNF