ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தாலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், தற்போது இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையத்தை பெரிதும் நம்பியிருப்பதால், இது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைபேசி வலையமைப்புகள் வழியாக மட்டுமே இணையத்தை அணுக முடியும், ஆனால் அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
