இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய பயண வழிகாட்டி நிறுவனமான ‘லோன்லி பிளானட்’ (Lonely Planet) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான உலகில் சுற்றிப்பார்க்க வேண்டிய சிறந்த 25 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தெரிவாகி, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ‘லோன்லி பிளானட்’ தனது “Best in Travel 2026” என்ற புதிய வழிகாட்டிப் புத்தகத்தில், யாழ்ப்பாணத்தை கலாசாரம், உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்குச் (Culture, Cuisine, and Island Adventures) சிறந்த இடமாகப் பாராட்டியுள்ளது. இந்தத் தேர்வு, பல பத்தாண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த நகரம் மீண்டும் ஒரு கலாசாரச் சுற்றுலா மையமாக உயிர் பெற்றிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின் போது வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இவ்வுறுதியைத் தெரிவித்தனர். 

ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற இச்சந்திப்பில், வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

நகர அழகாக்கல், சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

By RifkaNF