ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அவர் குறிப்பிடுகையில், இந்த “யானை விரட்டும் நடவடிக்கை” குறித்த செய்திகள் வெளியான பின்னரே அமைச்சு அதிகாரிகள் இது குறித்து அறிந்ததாகவும், அதன் பின்னர் அதுபற்றி வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

அதன்படி, குறித்த நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு சுற்றாமல் அமைச்சு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மனித-யானை மோதலைத் தீர்ப்பதற்காக, மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான ஒரு நடவடிக்கையை ஆரம்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தச் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டினார். 

யானைகளை பாரியளவில் பாதுகாப்பு வலயங்களுக்குள் விரட்டுவது என்பது மனித-யானை மோதலுக்கு எந்த வகையிலும் அறிவியல்பூர்வமான தீர்வு அல்ல என்றும் அந்தச் சிரேஷ்ட அதிகாரி கூறினார். 

மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டத்தின்படி, தற்போது தப்பொவ மற்றும் கலாவெ ஆகிய வனப்பகுதிகளில் யானைகளுக்கான ஊட்டச்சத்து வலயத்தை ஏற்பாடு செய்தல், புத்தளம் உட்பட பல பகுதிகளில் சுமார் 70 ஏக்கர் புல்வெளிகளைப் பாதிக்கும் ஆக்கிரமிப்புத் தாவரங்களான அந்தர போன்றவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும், மின்வேலிகளைப் பலப்படுத்த புதிய அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், வனவிலங்குத் திணைக்களத்துக்காக 100 கெப் வண்டிகள் மற்றும் 180 மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மனித-யானை மோதல் முகாமைத்துவத்துக்கான தேசியத் திட்டத்தில் 600 புதிய வனவிலங்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதும் உள்ளடங்கியுள்ளது. 

தற்போது, சுமார் 60 வீதத்திற்கும் அதிகமான யானைகள் வனங்களுக்கு வெளியே தங்கியுள்ளதாகவும், கிராமப்புறங்களில் கிடைக்கும் உணவின் காரணமாகவே யானைகள் பாதுகாப்பு வனங்களுக்கு செல்வதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, பாதுகாப்புப் பகுதிகளில் புற்கள் உட்பட யானைகளுக்குத் தேவையான உணவை அதிகளவில் கிடைக்கச் செய்வதன் மூலம் கிராமங்களுக்குள் நுழையும் யானைகளைக் குறைப்பது, யானை வழித்தடங்களை உருவாக்குவது, மற்றும் மின்வேலிகளைப் பலப்படுத்துவது ஆகியவையே மனித – யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் சுற்றாடல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கிராமங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்டியடிக்கும் நடவடிக்கை கடந்த நவம்பர் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. 

இதில் வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2000 அதிகாரிகள் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

By RifkaNF