நீதிமன்றச் செயல்முறைகள் மூலம் நன்னடத்தைப் பொறுப்பில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனிப்பு இல்லாமை மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சிறுவர்களைப் பாடசாலைக் கல்வியில் இணைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

போதைப்பொருள் பழக்கம், திருட்டு, கொலை, பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் இதில் அடங்குவர். 

பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத சிறுவர்களுக்கு, ‘ஊகிக்கப்பட்ட வயது வரம்பின்’ அடிப்படையில் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சில சந்தர்ப்பங்களில், தந்தை அல்லது தாயின் பெயருக்குப் பதிலாக, அந்த நன்னடத்தைப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள மாகாணத்தின் ‘மாகாண நன்னடத்தை ஆணையாளரின்’ பெயரைப் பயன்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

பதிவாளர் நாயகம் திணைக்களம் ஊடாக இந்தச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இச்சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி செய்து சமூகத்துடன் இணையும்போது, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. ஏனெனில் இவர்கள் நன்னடத்தைப் பாடசாலைகளிலேயே கல்வியை முடித்துள்ளனர். 

தற்போது 46 அரச நன்னடத்தைப் பராமரிப்பு நிலையங்களிலும், அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 308 நிலையங்களிலும் மொத்தமாக 9,191 சிறுவர் மற்றும் இளைஞர், யுவதிகள் தங்கியுள்ளனர்.

By RifkaNF