உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ் நகரத்தின் மீது நேற்று (31) நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரஷியா தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், அங்குள்ள ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து சேதாரமானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 309 ஷாஹெத் மற்றும் டெகாய் ட்ரோன்கள் மூலமாகவும், 8 ஏவுகணைகள் மூலமாகவும், ரஷ்யா தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், அவற்றில் 288 ட்ரோன்கள் மற்றும் 3 ஏவுகணைகளை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 21 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகள் அதன் இலக்குகளைத் தாக்கியதில், 5 மாத குழந்தை உள்பட 10 குழந்தைகள் என மொத்தம் 82 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்துடன், ஏவுகணைத் தாக்குதலில் கீவ் நகரத்தில் அமைந்திருந்த 9 தளங்களைக் கொண்ட குடியிருப்புக் கட்டடம் ஒன்று முற்றிலும் தகர்ந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல், ரஷ்யாவின் முக்கிய மாகாணங்களின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்த முயன்ற 32 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RifkaNF