மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 25 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையுடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், பரிசோதகர் எஸ். சந்திமா தலைமையிலான குழுவினர் மாறுவேட கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்போது கருவப்பங்கேணி அம்புரோஸ் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 24 வயது இளைஞன், அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 34 வயது ஆண் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயது பெண் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தற்போது இதே குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபோது, கருவப்பங்கேணியைச் சேர்ந்த மற்றொரு போதை வியாபாரியுடன் தொடர்பு ஏற்படுத்தி, பிணையில் வெளிவந்த பின்னர் இணைந்து வியாபாரம் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

By RifkaNF