யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 22 – யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றின் வளவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டின் மலசல கூடத்திற்கு குழி தோண்டியபோது சந்தேகத்திற்கு இடமான பொதியைக் கண்ட வீட்டின் உரிமையாளர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பொதியைப் பார்வையிட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, நீதிமன்று அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கியது.

இன்று வெள்ளிக்கிழமை, நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொதிகளில், 30 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான 5,000 ரவைகள் காணப்பட்டன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.