தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆவணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் தேங்கியுள்ளதாக தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மூன்றாவது நாளாக தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பெருந்தொகையான கடிதங்கள், பார்சல்கள் மற்றும் பொருட்கள் தேங்கி கிடப்பதாகவும், அவை இன்னும் எண்ணப்படவில்லை எனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தபால் அலுவலகங்களில் பொது சேவை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து கடித விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று தபால் சேவைகளை பெற வந்த பொதுமக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வீடு திரும்ப வேண்டியேற்பட்டுள்ளது.

தபால் ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.பி.சி. நிரோஷனா, தபால் ஊழியர்களால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

By RifkaNF