ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான ரி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ரி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் முக்கோண தொடரில் நேற்று முன்தினம் (01) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்காண்ட ஆப்கான் அணி 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களையே பெற்றது. இதன்போது ஆப்கான் அணித் தலைவர் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ரி20 சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 165 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவர் அதிக ரி20 விக்கெட்டுகளை வீழ்த்தியவராக முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டார்.
முன்னதாக ரி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வரிசையில் 164 விக்கெட்டுகளை வீழ்த்தி டிம் சௌதீ முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியும் பங்கேற்றிருக்கும் இந்த முக்கோண தொடரில் ஆப்கான் அணி பெறும் முதல் வெற்றியாக இது இருந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கான் அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.