ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 3 ஆவது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றது. நிசாகத் கான் 42 ஓட்டங்களையும், ஜீஷன் அலி 30 ஓட்டங்களையும், யாசிம் முர்தசா 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பங்களாதே​ஷ் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ஓட்டங்களையும், தன்சித் ஹசன் 14 ஓட்டங்களையும் எடுத்தனர்.

3 ஆவது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பங்களாதேஷ்17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 

தவ்ஹித் ஹிருதோய் 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RifkaNF