மன்னாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை உடனடியாக மீள முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளரால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத் தடுப்பு, மீன்வளம் பாதுகாப்பு, பறவைகளின் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாடு உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்தினுள் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்து செயற்றிட்ட நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அமைந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மீள் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான இலக்கை அடைவதற்கு தேசிய முக்கியவத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எரிசக்தி அமைச்சு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைக்கு அமைய 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காற்றாலை மின் திட்டம் ஆரம்பிப்பது தொடர்பில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலை, செயற்றிட்டப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட விசேட குழுவின் சிபாரிசுகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு வலுசக்தி அமைச்சின் செயலாளரால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

