வணக்கம் டொக்டர். சமீபகாலமாகவே சிக்கன்குனியா தீவிரமடைந்து வருகின்றது. எனது குடும்பத்திலும் கூட மூன்று பேர் வரையில், இதனால் பாதிக்கப்பட்டனர். ஆகவே, மீண்டும் அச்சுறுத்தும் சிக்கன்குனியா நோய் பற்றி நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி சில ஆலோசனைகளைத் தருவீர்களா?
எம்.நிஷாந்தன்,
கொழும்பு.
உண்மை தான் நிஷாந்தன். சிக்கன்குனியாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு
தசாப்தங்களுக்கு முன்னர் எம்மை அச்சுறுத்திச் சென்ற இந்த நோய், மீண்டும் தலைதூக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்து, தற்போது நாடுமுழுவதும் இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள்.
இது, டெங்கு நோய் போலவே, ஈடிஸ் வகை நுளம்புகளால் பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்த வைரஸ் உடலினுள் சென்று 3 தொடக்கம் 7 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் தோன்றும்.
இந்த நோய் மூன்று பிரதான அறிகுறிகள் மூலம் இனங்காணப்படும்.
அதிக காய்ச்சல் (390c க்கு மேல்)
மூட்டு வலி அல்லது வீக்கம்
சருமத்தில் சிவந்த நிற புள்ளிகள்
இவற்றுடன் தலைவலி, பசியிழப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் கை, கால்கள் மரத்துப் போதல் போன்ற அறிகுகள் தோன்றலாம்.
சிகிச்சை வழங்கும் போது, இந்த நோயினை 3 கட்டங்களாகக் கருதுவோம்.
முதல் கட்டம் 2 வாரங்கள் வரை இருக்கும். இதன்போது காய்ச்சல், மூட்டுவலி, தோல் புள்ளிகள் என்பன தோன்றலாம்.
இரண்டாம் கட்டம் 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கும். இதன்போது உடல் வலி, சோர்வு, மூட்டு வீக்கம் என்பன பிரதான அறிகுறிகளாகும். 3 மாதங்களின் பின்னர் கூட சிலருக்கு நோய் நீடிக்கலாம். இந்த 3ஆம் கட்டம் உடல் பலவீனம், தீராத மூட்டுவலி என்பவற்றை பிரதானமாகக் கொண்டிருக்கும்.
ஆகவே, இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் செய்யவேண்டியது இவை தான். அதாவது இந்நோயாளர்கள் நன்கு ஓய்வெடுக்கவேண்டும். அதிக ஓய்வானது, பின்னர் ஏற்படக்கூடிய நோயின் தீவிரத்தன்மையை குறைக்கும்.
அதுபோல், நிறைய திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக, கொதித்தாறிய தண்ணீர், சுத்தமான பழச்சாறுகள் மற்றும் ஜீவனி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளத் தவறாதீர்கள்.
மேலும், இந்நோய் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில், மருத்துவர் பரிந்துரைப்பதைத் தவிர்த்து, உங்கள் விருப்பத்துக்கேற்ற வகையிலான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, பரசிற்றமோல் மாத்திரைகளை மாத்திரமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேசமயம், இந்நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் சிலருக்கு, அவசர சிகிச்சைத் தேவைப்படலாம். 5 நாட்களுக்கு மேலான காய்ச்சல், தீராத வலி, மறதி, குழப்பம், ஈறுகளில் இருந்து இரத்தம் வருதல், கண்கள் சிவத்தல் மற்றும் நோயாளி அதிகப்படியான நோயின் திவிரத்தை உணரும் நிலையில், உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல மறக்க வேண்டாம்.
இறுதியாக, இந்த நோயைப் பொறுத்தவரை, நோய்க்கான சிகிச்சையை விட, நோய்த்தடுப்பே சிறந்தது. நுளம்புகளை கட்டுப்படுத்துங்கள். நுளம்புக் கடியில் இருந்து உங்களையும், உங்கள் அன்புக்குறியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்