இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது இரண்டு நாட்டுப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர், குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, யாழ். ஊர்காவற்றுறை நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் குறித்த மீனவர்கள் இன்று (03) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், அனைவரையும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
