வெலிமடை, மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. 

மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

நேற்று (05) மாலை இவ்வாறு மண் மேடு சரிந்து விழுந்திருந்ததுடன், இதன் காரணமாக வெலிமடை – மஸ்பன்ன வீதியிலான பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. 

தற்போது ஊவா பரணகம பிரதேச சபையினால் குறித்த இடத்தில் சரிந்து விழுந்த மண் அகற்றப்பட்டு வருவதுடன், தற்போது வாகனப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. 

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 173.5 மி.மீ, அம்பாறை மாவட்டத்தின் லகுகலவில் பதிவாகியுள்ளது. 

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டியவில் 120.5 மி.மீ மற்றும் கிராதுருக்கோட்டை பிரதேசத்தில் 112 மி.மீ மழைவீழ்ச்சியும், நுவரெலியாவின் கோனபிட்டிய பிரதேசத்தில் 98 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

நேற்று (05) காலை 8.30 மணி முதல் இன்று (06) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதிக்குள் இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில் ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

கரையை அண்டிய கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் ஓரளவுக்கு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடுவதுடன், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் 2.5 – 3 மீற்றர் வரை உயரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

By RifkaNF