சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
- சம்பா மற்றும் கீரிசம்பா நெல் கொள்வனவின் போது குறைந்தபட்ச விலையை அதிகரித்தல்
நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒருகிலோ 120/- ரூபா, 125/- ரூபா மற்றும் 132/- ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்துவரும் போகங்களில் நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்விதந்துரைகளின் அடிப்படையில், உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒருகிலோவுக்கு 120/- ரூபாவாகப் பேணுவதற்கும், சம்பா நெல் கொள்வனவை ஒருகிலோவுக்கு 125/- ரூபாவிலிருந்து 130/- ரூபாவாகவும், கீரிசம்பா நெல் கொள்வனவை ஒருகிலோவுக்கு 132/- ரூபாவிலிருந்து 140/- ரூபாவாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தியதடன், அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
