தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது தேசிய மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்தன.
இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின் விஜய்யின் பேச்சு தொடங்கும் என்றும் இன்றைய மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரையில் தவெகவின் 2 வது மாநில மாநாடு 3 மணிக்கே ஆரம்பமாக உள்ளதாகவும், இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மாநாட்டை 4 மணிக்கு முதல் 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சரியாக 3 மணிக்கு மாநாடு திடலுக்கு விஜய் வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.