தலவாக்கலை பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவில் அமைந்துள்ள தோட்ட லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (25) ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 4 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது, மேலும் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தேசபிரிய பண்டார தெரிவித்தார்.
ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ ஏனைய குடியிருப்புகளுக்கு பரவியுள்ளது, மேலும் இவ் தீ விபத்தில் யாருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை எனவும் தீயில் காயமடைந்ததாக தகவல் ஏதும் இல்லை எனவும் அவர் கூறினார்.20 குடியிருப்புக்களை கொண்ட லயன் தொகுதி குடியிருப்பொன்றே இவ்வாறு திடீர் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. குடியிருப்பில் ஏற்பட்ட தீயை குடியிருப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.தளபாடங்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.