புத்தளம் வில்பத்து தேசிய பூங்காவின் எல்லையில், அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கிய இல்மனைட் சலவை ஆலையை, மேலதிக விசாரணைகள் முடியும் வரை பொலிஸ் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க இன்று (11) உத்தரவிட்டார். 

புத்தளம் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இப்பகுதியில் முறையான சட்ட அனுமதியின்றி இல்மனைட் சலவை ஆலை இயக்கப்பட்டு, சுற்றுச்சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

வலான பாணந்துறை மத்திய மாசு கட்டுப்பாட்டுப் பிரிவு (PCU), புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியின்றி ஆலை இயக்கப்பட்டு, தொல்பொருள் திணைக்கள உத்தரவுகளை மீறி சுற்றுச்சூழலை பாதித்ததாக வந்த முறைப்பாட்டை அடுத்து, சமீபத்தில் இந்த இடத்தை சோதனையிட்டது. 

நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்த மத்திய மாசு கட்டுப்பாட்டுப் பிரிவு, ஆலையால் பாரிய சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தது. 

பொலிஸ் பரிசோதகர் ஜனித குமார, இந்த உள்ளூர் நிறுவனம் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியின்றி, ஒரு பெரிய நீர்த்தேக்கம் உட்பட நான்கு நீர்த்தேக்கங்களை நிர்மாணித்து, கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறினார். 

ஆலையின் சார்பாக ஆஜரான சட்டக் குழு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை மறுக்கவில்லை. ஆனால், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் பலமுறை அனுமதி கோரியும் வழங்கப்படவில்லை எனவும், இதுதொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. 

இவற்றைக் கருத்தில் கொண்டு, நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க, விசாரணைகள் முடியும் வரை ஆலையை பொலிஸ் காவலில் வைக்குமாறு வாலனா பாணந்துறை மத்திய மாசு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு உத்தரவிட்டார். இவ்வழக்கு செப்டம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

By RifkaNF