யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் ( CCIY )இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15, 16, 17 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.
புத்தகக் கண்காட்சியாக மாத்திரமல்லாது புத்தக வெளியீடுகள், சிறுவர் நாடகங்கள், நாடகங்கள், அனைவருக்கும் மேடை (Open Mic ), புகழ்பூத்த ஈழத்து எழுத்தாளர் கலந்துரையாடல் மற்றும் பல நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற உள்ளது.
மூன்று நாட்களுக்குமான நிகழ்ச்சிகள் கீழே:
15ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பர்.
மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள். ஆரம்ப நிகழ்வு மேடையில், கடந்த வருடம் இடம்பெற்ற புத்தகத் திருவிழா தொடர்பான எழுதாக்கப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான புத்தகப் பரிசில்கள் வழங்கப்படும்.
அதேதினம் மாலை 5.00 மணிக்கு ‘ஈழத் தமிழ்ச் சிறுவர் இலக்கியப் படைப்புகளின் அறிமுகம்’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள நிகழ்வில் நான்கு சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களின் அறிமுகங்கள் இடம்பெறும்.
6.00 மணிக்கு சண் நாடகக் குழுவினரின் (குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மாணவர்கள்) ‘தலையெழுத்து’ மற்றும் ‘ஆட்டுக்குட்டி’ ஆகிய நாடகங்க ஆற்றுகைகள் இடம்பெறும்.
இரண்டாம் நாளான சனிக்கிழமை, 16ஆம் திகதி காலை 10.30 மணிக்கு எழுத்தாளர் எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘தலைமறைவு வாழ்க்கை’, நூலறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
அதேதினம் மாலை 2.30 மணிக்கு கவிஞர் சு ஜெயசீலன் அவர்களின் ‘புல்வெளி புள்வெளி’, சூழலியல் கவிதை நூல் வெளியீடு இடம்பெறும்.
மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் Open Mic எனப்படும் ‘அனைவருக்கும் மேடை’ நிகழ்வு இடம்பெறும். உங்களிடையே மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் மேடையே Open Mic, உங்களுள் ஒளிந்திருக்கும் ஆற்றல்களை மேடையேற்ற இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, 17ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் ‘ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பின் புகழ்பூத்த மூத்த எழுத்தாளுமைகளுடனான கலந்துரையாடல்’ இடம்பெறும்.
தொடர்ந்து 6.00 மணிக்கு சண் நாடகக் குழுவினரின் ‘முட்டை’, ‘அரோகரா’ ஆகிய நாடகங்கள் இடம்பெறும்.

வாசிப்புப் பழக்கம் அருகி விட்டது என்று புலம்பாது குடும்பங்களாக இந்த நிகழ்வில் பங்குகொள்வோம். முக்கியமாக பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை அறிந்து கொள்ளவும், எழுத்தாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள், கலைஞர்கள் என்று பல ஈழத்து ஆளுமைகளை சந்திக்கவும் இவ்வாய்ப்பை தவறாது பயன்படுத்துவோம்.
அத்துடன் விடுமுறையில் வீட்டில் நிற்கும் குழந்தைகளை மறக்காது அழைத்து வந்து சிறுவர் நாடகங்கள் அவர்கள் கண்டு களிக்கவும் விரும்பிய புத்தகங்களை தேர்வு செய்யவும் வாய்ப்பளிப்போம்.
இது எமக்கான திருவிழா. புத்தகங்களையும் வாசிப்பையும் கொண்டாடும் ஒரு பண்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்று திரள்வோம்.
ஆவணி மாதத்தில் நல்லூர் திருவிழாவோடு புத்தகத் திருவிழாவும் நடைபெறும் என்று புலம்பெயர்ந்தோர் முதல் தமிழ்பேசும் அனைவரும் திட்டமிட்டு பங்குபெறும் நிகழ்ச்சியாக இதை மாற்றுவோம்.
